ரெட்டிச்சாவடி
கிராமசபை கூட்டம்
மே தினத்தை முன்னிட்டு கடலூர் அடுத்த அழகிய நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ.ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள்.
இதில் கலெக்டர் பேசும்போது, இந்த கிராமத்தில் உரிய விசாரணை நடத்தி தகுதியான நபர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 138 பேர் வீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய முறையில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை வசதி இல்லாத நிலையில், அவர்கள் உடனடியாக கழிவறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் பொதுமக்கள் உறிஞ்சி குழாய் திட்டத்தை செயல்படுத்தி சுகாதாரமாக வாழ வேண்டும் என்றார்.
பஸ் நின்று செல்ல நடவடிக்கை
தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் தெரிவித்தால் அரசு நிபந்தனைகளுடன் அதை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உங்கள் பகுதியில் அரசு பஸ் நிற்கவில்லை என தெரிவித்துள்ளீர்கள். பஸ் நின்று செல்ல உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வருவாய்) மதுபாலன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி வரவேற்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுதாகர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.