நெல்லையில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு அந்த்யோதயா ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில்
திருவாரூர் - காரைக்குடி இடையே பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக அகல ரெயில் பாதை ரூ.ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரெயில் இயக்கப்படவில்லை. 1980-ம் ஆண்டு முதல் சென்னை எழும்பூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மனோரா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் கம்பன் எக்ஸ்பிரஸ் என மாற்றப்பட்டது.
திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ், காரைக்கால்- திருவாரூர்- சென்னை வழித்தடத்துக்கு மாற்றப்பட்டு தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் வேதனை
அகல ரெயில் பாதைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு மீண்டும் இயக்கப்படவில்லை என்பது இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு மிகப்பெரிய வேதனையாக உள்ளது.
இதன் காரணமாக கிராம மக்கள் பஸ்களையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். பஸ்களில் ரெயில்களை விட கட்டணம் அதிகம் என்பதால் மக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அந்த்யோதயா ரெயில்
திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் வசதி இல்லாத காரணத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பஸ்களில் செல்வதால் கூடுதல் நேரமாகிறது. ரெயிலில் பயணித்தால் நேரமும் மிச்சமாகும். கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை போன்று தினசரி ரெயிலை திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும் என்பது இந்த பகுதியை சேர்ந்த மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு ஏழைகள் ரதம் என அழைக்கப்படும் 'அந்த்யோதயா' ரெயிலை இரவு நேரத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
முன்பதிவு இல்லாத பெட்டிகள்
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் மிக குறைந்த கட்டணத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாகை, திருவாரூர் மாவட்டங்கள் வழியாக அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இயக்கப்படவில்லை. ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல வசதியாக அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் உள்ளிட்டோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.