சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கவர்னர் ஆய்வு நடத்துவது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேச முயன்றார். அவருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
சபாநாயகர்:- கவர்னர் குறித்து சட்டசபையில் விவாதிக்க கூடாது என்று விதி தெளிவாக இருக்கிறது. எனவே நீங்கள் அந்த பிரச்சினை பற்றி பேசினால், நான் அவற்றை நீக்க நேரிடும்.
மு.க.ஸ்டாலின்:- கவர்னர் ஆய்வு நடத்துகிறார். இது மாநில சுயாட்சிக்கு எதிரானது. 1995-ம் ஆண்டு இதே அவையிலே கவர்னர் மீது நடவடிக்கை எடுத்து கவர்னரை நீக்க வேண்டுமென்று, தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அமைச்சராக இருந்த நாவலர் மூலம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது, அது அவைக்குறிப்பில் இருக்கிறது. இது தி.மு.க.விற்காக தனிப்பட்ட முறையில் எடுத்து வைக்கக்கூடிய வாதம் இல்லை. இன்றைக்கு, ஆளும் கட்சியாக இருக்கும் உங்களுக்கும் சேர்த்து தான் இந்த வாதத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். எனவே, இதை அனுமதிக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சபாநாயகர்:- விதி 92-7-ன் கீழ் கவர்னரை பற்றியோ, ஜனாதிபதி பற்றியோ பேச இங்கு அனுமதியில்லை.
மு.க.ஸ்டாலின்:- தி.மு.க. ஆட்சி இருந்த நேரத்தில் தமிழ்நாடு தான் மாநில சுயாட்சிக்காக முதன் முதலில் இந்தியாவிலேயே தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஆட்சிக்கு முன்பு வரை மாநிலத்தில் பொறுப்பில் இருந்திருக்கக்கூடிய தி.மு.க.வாக இருந்தாலும் சரி, இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த நேரத்திலும் அரசினுடைய உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இதே அவையிலே விதிகளையே சஸ்பெண்ட் செய்து மாநில கவர்னர் பற்றி விவாதம் நடத்தி கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அவைக்குறிப்பிலே தெளிவாக இருக்கிறது. அப்படி இருக்கும் மாநிலத்தில், கவர்னர் தொடர்ந்து மாவட்ட ரீதியாக தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.
சபாநாயகர்:- சட்டசபை விதிகளை தளர்த்த முடியாது. அதை நான் விரும்பவில்லை. விதிமுறைகளின் படி தான் நான் அவையை நடத்தி வருகிறேன்.
மு.க.ஸ்டாலின்:- ஏற்கனவே அந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறது. தளர்த்தப்பட்டு அனுமதி தந்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்த அவையிலே எப்படி இந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறதோ அதை தளர்த்தி அந்த அடிப்படையிலே அவையை ஒத்திவைத்து அது குறித்து விவாதிக்க வேண்டும்.
சபாநாயகர்:- திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் நான் அவையை நடத்தி வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைக்காக நான் விதியை தளர்த்த விரும்பவில்லை. அதற்கு விதிகளில் இடம் இல்லை.
மு.க.ஸ்டாலின்:- இந்த மாநிலத்தின் உரிமையை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற அந்த சூழ்நிலையில் தான் அந்தக் கருத்தை எடுத்து சொல்லியிருக்கிறேன். நீங்கள் அதை தளர்த்தி தருவதற்கு முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறீர்கள். எனவே, இதுபற்றி பேச நீங்கள் அனுமதிக்காத காரணத்தால் இதனைக் கண்டித்து தி.மு.க. இந்த அவையில் இருந்து வெளி நடப்பு செய்கிறது.
இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதே பிரச்சினைக்காக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரை பற்றி அவையிலே பேசுவதற்கு இடமில்லை, அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்தார். நான் இதே அவையில் 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி அன்றைக்கு தமிழகத்தின் கவர்னராக இருந்த சென்னா ரெட்டியை பற்றி ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீண்ட விவாதமே நடத்தப்பட்டிருக்கிறது.
ஏழாண்டு அல்ல ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமென்று சொன்னால் கூட மாநில சுயாட்சியினுடைய கொள்கைக்காக அண்ணா, கருணாநிதி வகுத்து தந்திருக்கக்கூடிய அந்த மாநில சுயாட்சியினுடைய கொள்கை வெற்றி பெற அதை நிலை நிறுத்திட எந்த தியாகத்தையும் செய்வதற்கு தி.மு.க. தயாராக இருக்கிறது.
8 வழிச்சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்துகிற பொழுது மக்களுடைய உணர்வுகளை கருத்து கேட்பு என்ற அடிப்படையிலே கேட்டு அதற்குப் பிறகு அந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன். இந்த திட்டம் தொடர்பாக போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நாங்கள் இதற்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம், எங்களுடைய போராட்டங்களும் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.