சென்னை,
தமிழகத்தில் தொடக்க நிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கல்வித் தேவைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களை கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் ஒப்புதல் பெற்று பூர்த்தி செய்து வந்தார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் பார்வைக்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் வழியாக கொண்டு போய் சேர்த்து கொண்டிருந்த நிலையில், கல்வித்துறையில் வேலைகளை துரிதப்படுத்துவதற்காக பள்ளிக்கல்வி கமிஷனர் பதவி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.
அப்போதே இந்த பதவிகளுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அந்தவகையில் அந்த பதவியில் சிஜி தாமஸ் வைத்யன், வெங்கடேஷ் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர். இருப்பினும், பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்த கண்ணப்பன் தன்னுடைய பணியை செய்து கொண்டு தான் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர்களின் முழு அதிகாரத்தையும், பள்ளிக்கல்வி கமிஷனராக இருப்பவர் கவனிப்பார் என்ற புதிய அறிவிப்பு அரசின் மூலமாக முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பலதரப்பட்ட ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்களிடையே மீண்டும் எதிர்ப்பை ஏற்படுத்தி குரல்கள் எழும்பி இருக்கிறது.
இதற்கிடையில், பள்ளிக்கல்வி கமிஷனராக நந்தகுமார் பொறுப்பேற்று கொண்டார். அவர் பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் மற்றும் கல்வித்துறையின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன், அந்த பதவியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ் குமாரிடம், கண்ணப்பன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார், கண்ணப்பனிடம் காத்திருக்கும்படியும், வேறு ஏதாவது பதவி வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அரசு தரப்பில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது தொடர்பான எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.