தமிழக செய்திகள்

வர்த்தகம் முதல் கச்சா எண்ணெய் வரை... அமெரிக்காவிடம் அடகுவைத்த பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

70 ஆண்டுகால வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

வர்த்தகம் முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், வளைகுடா பகுதியிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வர முடியாத நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் 30 நாட்களுக்கு வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் அமெரிக்காவிடம் நரேந்திர மோடி அடகு வைத்து விட்டார் என்பதையே இது உறுதிபடுத்துகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கியதற்காக 25 சதவிகித பரஸ்பர வரியைத் தவிர, இந்தியா மீது 25 சதவிகித அபராத வரியை விதித்திருந்தார். இந்தியாவின் எண்ணெய்க் கொள்முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை தூண்டுவதற்கு உதவுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய கொள்முதல் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கொள்முதலை குறைக்கத் தொடங்கின. இதன் எதிரொலியாக அமெரிக்கா - இந்தியாவிடையே வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து இந்தியா மீதான வரிகளை 18 சதவிகிதமாக அமெரிக்கா குறைத்தது.

1947 முதல் இன்று வரை தனித்துவமான இந்திய வெளியுறவுக் கொள்கை நடைமுறையில் இருந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், அணிசேரா நாடுகளை ஒன்றுதிரட்டி வல்லரசுகளுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கினார். இதனடிப்படை, ஏகாதிபத்திய எதிர்ப்பாக இருந்தது. அதேநேரத்தில், நேருவின் அணுகுமுறை காரணமாக சோவியத் யூனியன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தது. 1971 இல் வங்கதேச போர் உருவாவதற்கு முன்பாக, அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் மிகுந்த ராஜதந்திரத்தோடு இந்திய - சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்மூலம் வங்கதேசப் போரில் இந்தியாவுக்கு எதிரான, அமெரிக்காவின் ஏழாவது கடற்படையை வீரத்துடன் எதிர்கொண்டு வங்கதேசம் என்கிற சுதந்திரமான நாட்டை உருவாக்கிய பெருமை இந்திராகாந்தி அவர்களுக்கு உண்டு. இது நேரு - இந்திரா கடைபிடித்த வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

உலக அரசியலில் இந்தியாவிற்கென தனித்தன்மையுடைய சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இருந்த நிலையில், நரேந்திர மோடி படிப்படியாக அமெரிக்க ஆதரவு நிலை எடுத்து இன்றைக்கு எந்த நாட்டில், எந்தப் பொருளை, எப்படி வாங்குவது என்பதை இந்தியா முடிவு செய்வதற்கு பதிலாக அமெரிக்கா முடிவு செய்வது நமது 70 ஆண்டுகால வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய அவமானமாகும்.

நமது வெளியுறவுக் கொள்கை என்பது விடுதலைக்காக போராடுகிற நாடுகளுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இருந்து வந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது, தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டும் இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று பிச்சை போடுகின்ற வகையில், அமெரிக்கா அனுமதித்திருப்பது 140 கோடி மக்களையும் அவமதிக்கின்ற செயலாக நரேந்திர மோடியின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. இது வெட்கக்கேடான விஷயமாகும். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் அடிமைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

என்றார்.