ஊட்டி,
ஊட்டிக்கு சென்ற அரசு பஸ்சில் திடீரென முன்பக்க டயர் கழன்று ஓடியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளுடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் குன்னூர் அருகே பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சென்றபோது திடீரென்று முன்பக்க டயர் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதனால் தடுமாறிய பஸ்சை டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்தினார். பஸ் சாலையில் நீண்ட தூரம் உரசி சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 39 பயணிகளும் உயிர் தப்பினர்.
இதனால் அந்த பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். பின் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தனர். மேலும் மாற்று டயர் இன்றி சாலையில் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பஸ்சில் பயணித்த ஒருவர் கூறுகையில், "சினிமாவில் வரும் காட்சியை போல் நாங்கள் பயணம் செய்த பஸ்சில் இருந்து முன்பக்க டயர் கழன்று ஓடியது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அரசு பஸ்களை முறையாக பராமரித்து சாலைகளில் இயக்க வேண்டும்" என்றார்.