சென்னை,
வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.12 ஆயிரத்து 500 வழங்கவேண்டும், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும், மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்கவேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசார இயக்க நிகழ்ச்சி சென்னை தரமணியில் நேற்று தொடங்கியது.
இதனை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் வீடு, வீடாகச்சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்றை தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை பாதுகாப்பதிலும் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. மத்திய அரசு சர்வாதிகார போக்கை கையாள்வது வேதனை அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகளை கண்டிக்கும் வகையிலும், அது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்த பிரசார இயக்கத்தை முன்னெடுத்து உள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.