தமிழக செய்திகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மிகவும் மந்தம் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

தினத்தந்தி

சேலம்,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் தாக்கி 4 நாட்கள் ஆகியும் இன்னும் மின்வசதி செய்து தரவில்லை. கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நிவாரண பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஆட்சி பணி அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவை அனுப்பி பணிகளை மேற்கொண்டு இருந்தால் 2 நாட்களில் பணிகள் முடிந்திருக்கும். கஜா புயல் மீட்பு பணியில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. முகாம்களில் 1 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை முதல்-அமைச்சர் இதுவரையில் சந்திக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரூ.15 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆய்வு செய்ய மத்திய குழுவை அமைக்க வேண்டும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக வெட்டப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதேபோல் புயலால் சாய்ந்த தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும். தகுதியற்றவர்களை நியமிக்க முயற்சி நடந்து வருகிறது. தற்போது நியமிக்கப்பட்ட பொறுப்பாளரை நிரந்தர பதிவாளராக நியமிக்க கூடாது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்பும் திட்டம் முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். பெயர் அளவில் இல்லாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் துடிக்கிறார். இந்த திட்டத்துக்கு கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து முடித்து 8 வழிச்சாலை பணிகள் தொடங்கும் என்று கூறுகிறார்.

ஏற்கனவே அரசின் நடவடிக்கையை கண்டித்த கோர்ட்டு, நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. எனவே 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்