திருக்கோவிலூர்,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. அந்த வகையில், திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சித்தப்பட்டினம் கிராமத்தில் தொடங்கிய இந்த விநாயகர் சிலை ஊர்வலம் விநாயகர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சேனியர் வீதி, பெரியாயி கோயில் தெரு, மார்க்கெட் வீதி வழியாக, மிளகு விநாயகர் கோவிலை அடைந்து பின்னர் மணலூர்பேட்டை அருகே உள்ள கூவனூர் ஏரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, நீரில் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கும் இடத்தில் தீயணைப்புத் துறையினரும் ஆம்புலன்ஸ் அவசர சேவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.