தமிழக செய்திகள்

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 நண்பர்கள் கைது

தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் மொகித் (வயது 23). இவர் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து, 25 வயது இளம்பெண்ணை மீன்பிடி துறைமுகம் அருகே அழைத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து அந்த பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2,500, ஒரு செல்போன், 2 வெள்ளி மோதிரங்கள் ஆகிய வற்றையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மொகித், ரிதீஷ், ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.