செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அரசூர் கிராமம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அம்பத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் மீது ஏற்கனவே மதுராந்தகம் போலீசில் 2 கஞ்சா விற்ற வழக்குகளும், மேல்மருவத்தூர் போலீசில் 1 வழிப்பறி வழக்கும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிரபாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அயப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் அம்பத்தூர் போலீசார் கஞ்சா வியாபாரி பிரபாகரன் மீது பொருளாதார ரீதியாக நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு அவரது வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவல் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.