சென்னை
சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்அமைச்சராக இருக்கிறார். சசிகலா சிறை சென்ற பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை ஏற்றார்.
தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் பணிகளை கவனிக்கும் பொறுப்பை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். வழக்கில் ஜாமீன் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.
யார் தலைமையில் இயங்குவது? என்பதில் அ.தி.மு.க. (அம்மா) அணியில் தினகரன்எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.
நேற்று பேட்டி அளித்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு கட்சி விதிகள் தெரியவில்லை என்று கூறி இருந்தார். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பதாகவும் தொடர்வதாகவும் அவர் பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று வெற்றிவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 7 பேர் பேட்டி அளித்தனர்.
அப்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்சியின் நலனுக்காக உழைத்து வருகிறோம். தேவை இல்லாமல் வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசக் கூடாது. பொதுச் செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் சொல்லி தர வேண்டியதில்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி. ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி தங்களது வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. பொதுச் செயலாளர் சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினரை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் படத்தை போட்டோ பெயரை சொல்லியோ யாரும் ஓட்டு கேட்கவில்லை. அப்போது அங்கு மாவட்ட செயலாளராக வெற்றிவேல்தான் இருந்தார். அப்போது அவர் என்ன செய்தார்? இப்போது அவர் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை.
இதற்கு பதில் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றி வேலும், தங்க தமிழ் செல்வனும் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் அதிமுக உட்கட்சி விவகாரங்களை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.அதிமுக பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என கூறினர்