தமிழக செய்திகள்

மெரினாவில் ராட்சத அலை இழுத்துச்சென்றது: கடலில் மூழ்கிய 82 வயது முதியவர் 2 மணி நேரம் நீந்தி உயிர் தப்பினார்

சென்னை மெரினாவில் கடல் அழகை ரசித்தபோது 82 வயது முதியவரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது. 2 மணி நேரம் கடலில் நீந்தி துறைமுகத்தில் தத்தளித்த அவரை மத்திய பாதுகாப்பு படை வீரர் மீட்டார்.

தினத்தந்தி

சென்னை,

வேலூர் மாவட்டம் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 82). இவருடைய மகன் குமரன். இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவதாக தெரிவித்திருந்தார். ரெயில் மூலம் சென்னை வருவேன் என்றும் கூறி இருந்தார்.

இதனால் தனது மகன் குமரனை அழைத்துச்செல்வதற்காக கோவிந்தராஜ், வேலூரில் இருந்து பஸ் மூலம் சென்னை வந்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கியபோது, அவரது செல்போனில் தொடர்பு கொண்ட அவருடைய மகன் குமரன், தற்போது எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. வேறொரு நாளில் ஊருக்கு வருகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து சென்னை வந்த கோவிந்தராஜூக்கு மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க ஆசை ஏற்பட்டது. உடனே அவர், கோயம்பேட்டில் இருந்து பஸ் மூலம் அண்ணாசதுக்கம் வந்தார். பின்னர் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தார். கடலில் இறங்கி அலையை ரசித்து கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

பாதுகாப்பு படை வீரர் மீட்டார்

கடலில் மூழ்கிய கோவிந்தராஜ், காற்றின் வேகத்தில் சென்னை துறைமுகம் அருகே இழுத்துச்செல்லப்பட்டார். அவர் உயிர் பிழைக்க கரையை நோக்கி கடலில் தொடர்ந்து நீந்தியபடியே தத்தளித்தார். சுரஜ் அக்ரோ அருகே அவர் கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சன்னி தத்தா என்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் கவனித்தார்.

உடனடியாக அவர் கடலில் குதித்து கோவிந்தராஜை பத்திரமாக மீட்டார். அவருக்கு சென்னை துறைமுக பொறுப்புக்கழக அறக்கட்டளை ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரிடம் சென்னை துறைமுக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவர்களிடம் கோவிந்தராஜ் கூறும்போது, சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். கடல் அலை என்னை இழுத்து சென்றதும், அச்சப்படவில்லை. அலையின் திசைக்கு ஏற்ப நீந்தினேன். 2 மணி நேரம் நீந்தியபடியே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் சோர்வு ஏற்பட்டுவிட்டது. நல்லவேளையாக கடவுள் உருவத்தில் வந்த வீரர் என்னை காப்பாற்றிவிட்டார் என்றார்.

பாராட்டு-வெகுமதி

தள்ளாத வயதிலும் மனம் தளராது நீச்சல் போட்டு உயிர் தப்பிய கோவிந்தராஜை வேலூரில் இருந்து வந்து அவரது மகள் அழைத்து சென்றார்.

கடலில் தத்தளித்த முதியவர் கோவிந்தராஜை பத்திரமாக மீட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் சன்னி தத்தாவின் துணிச்சல் மற்றும் மனிதநேயமிக்க பணியை பாராட்டி அவருக்கு ரூ.3 ஆயிரம் வெகுமதி வழங்கி மத்திய தொழிற் பாதுகாப்பு படை உயரதிகாரி பாராட்டு தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?