தமிழக செய்திகள்

பத்திரங்களை கொடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

பத்திரங்களை கொடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைத்தனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சையை சேர்ந்தவர் அந்தோணிசாமி. பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தஞ்சையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சந்திரன் என்பவரிடம் 2016-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்றார். பணத்திற்கு ஈடாக தனது நண்பர்களின் நிலங்கள் தொடர்பான 4 பத்திரங்களை சந்திரனிடம் அந்தோணிசாமி அடமானம் வைத்தார். பின்னர் அவர், கடனை படிப்படியாக வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தார்.

வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சம் செலுத்தியவுடன் தனது பத்திரங்களை தரும்படி அந்தோணிசாமி கேட்டார். ஆனால் இன்னும் பணம் கொடுத்தால் தான் பத்திரங்களை திருப்பி தருவேன் என்று சந்திரன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணிசாமி இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், ரூ.1 லட்சத்துடன் மற்றொரு பத்திரத்தை சந்திரனிடம் கொடுக்க வேண்டும் என்று அந்தோணிசாமியிடம் கூறினார். மேலும் சந்திரனிடம் அடமானம் வைக்கப்பட்ட 4 பத்திரங்களையும் இன்ஸ்பெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த பத்திரங்களை அவர், அந்தோணிசாமியிடம் காட்டி, அந்த பத்திரங்களை பெற்று கொண்டதாக அந்தோணிசாமியிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து பெற்றார். ஆனால் பத்திரங்களை அவரிடம் ஒப்படைக்கவில்லை. பத்திரங்களை அவர் கேட்டபோது, தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள அறையில் தான் தங்கி இருப்பதாகவும், அந்த அறைக்கு வந்து பத்திரங்களை வாங்கி கொள்ளும்படியும் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் கூறினார்.

அதன்படி தங்கும் விடுதிக்கு சென்ற அந்தோணிசாமியிடம், பத்திரத்தை கொடுப்பதற்கு தனக்கு பணம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். இதையடுத்து அந்தோணிசாமி ரூ.50 ஆயிரம் கொடுத்தார். அதை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர், ஒரு பத்திரத்தை மட்டும் கொடுத்தார். மேலும் 3 பத்திரங்கள் வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அந்தோணிசாமி இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கத்தை கையும், களவுமாக பிடிப்பதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து கடந்த சில நாட்களாக அவரை கண்காணித்து வந்தனர். ஆனால் அவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்த ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக சென்றுவிட்டார். பின்னர் சென்னையில் போலீஸ் தொடர்பான பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டார். இதனால் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கத்தை கையும்களவுமாக பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தோணிசாமி அடகு வைத்த பத்திரங்களை இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் வாங்கி கொண்டதும், அதை அவரிடம் ஒப்படைக்காமலேயே கையெழுத்து வாங்கி கொண்டதும் தெரியவந்தது. இதன்பின்னர் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அந்த அறை கதவை யாரும் திறந்துவிடக்கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அறைக்கு சீல் வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் முன்னிலையில் அறை கதவை திறந்து சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஜோதிமகாலிங்கத்தை வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை