சென்னை,
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வெளியூர் மற்றும் வெளிமாநில ரெயில்களில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம், பரிசு பொருட்கள், தங்கம் ஆகிய வற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை எண்.6ல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் தங்கம், ரூ.3.80 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ்(32), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (46) ஆகியோர் உரிய ஆவணமின்றி தங்கம் மற்றும் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு படையினர் 50 கிராம் தங்கம் மற்றும் ரூ.3.80 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை பறிமுதல் செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.