தமிழக செய்திகள்

தனியார் வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்:எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ உட்பட அனைத்து வங்கிகளிலும்‌ 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து பெறப்பட்ட நகைக்‌ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

''கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு மடிபவன்தான் விவசாயி என்று ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேளாண் பெருமக்கள், காலத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பயிர்க் கடனை, கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தனது உறுப்பினர்களுக்கு வழங்கும். கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பருவ காலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக தேவைப்படும் நிதியை இருப்பில் வைத்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, தற்போதைய முதல்வர், அவரது வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று பொதுமக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும்; நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நீங்கள் 5 பவுன் வரை அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மேடைக்கு மேடை பேசி, மக்களை நகைக் கடன் வாங்கத் தூண்டி வந்தனர்; ஆட்சியையும் பிடித்தனர்.

2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, இந்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்தனர். இவர்களது பொய்யான வாக்குறுதிகளை நம்பி, வேளாண் பெருமக்கள், வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் என்று பொதுமக்கள் பலரும் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கிகள், நகைக் கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியுடன், பருவ காலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக வழங்க ஒதுக்கப்பட்டிருந்த நிதியையும், நகைக் கடனுக்காக வழங்கிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிர்க் கடனை வழங்கப் போதுமான நிதி கூட்டுறவுக் கடன் சங்கங்களிடம் இல்லை என்றும்; எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எடுத்துக் கூறினோம்.

இரு நாட்களுக்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன் நகைக் கடன் தள்ளுபடி என்று பெயரளவில் ஒரு அரசாணையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பற்றி எந்த விவரமும் இதில் இல்லை.

எப்போதும் போல் திமுக அரசு கூட்டுறவு சங்கங்களிடம் பயிர்க்கடன் வழங்கத் தேவையான அளவு நிதி உள்ளது என்று தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் கூட்டுறவுக் கடன் சங்கங்களிடம் பயிர்க் கடன் வழங்கப் போதுமான நிதி இல்லாததால் விவசாயிகள், தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்