தமிழக செய்திகள்

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,200 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம், வெள்ளி விலை ‘கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் ‘மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

இதேபோல், வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இதுவும் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. இப்படியாக நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, நேற்று எந்த வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் இறக்கம் கண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

அதன்படி, தங்கம் விலை நேற்று முன்தினத்தை விட நேற்று காலையில் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் குறைந்திருந்தது. பிற்பகலில் மேலும் கூடுதலாக கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் சரிந்திருந்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலையும் நேற்று முன்தினத்தை விட நேற்று காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம், பிற்பகலில் மேலும் கூடுதலாக கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.405-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.55,000 குறைந்து, ரூ.3,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

31.01.2026 ஒரு சவரன் - ரூ.1,19,200 (இன்று)

30.01.2026 ஒரு சவரன் - ரூ.1,26,800 (நேற்று)

29.01.2026 ஒரு சவரன் - ரூ.1,34,400

28.01.2026 ஒரு சவரன் - ரூ.1,24,880

27.01.2026 ஒரு சவரன் - ரூ.1,19,680

26.01.2026 ஒரு சவரன் - ரூ.1,20,200