சென்னை,
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் வழங்கி சிறப்பித்தார். இன்று காலை அங்கு பிறந்த 14 குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரத்தை அவர் வழங்கினார்.
மேலும் அங்கு இன்று இரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 100 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் சேர்வதற்கான பணி ஆணைகளையும் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.