தமிழக செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது

தினத்தந்தி

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள். வழக்கம்போல், நடப்பாண்டும் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காண்பித்தார்கள்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்குகின்றன.

கடந்த 2023-24=ம் கல்வியாண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 252 மாணவர்கள், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், 78 திருநங்கைகள் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 604 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை