திருப்பூர்,
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து (பழைய பஸ் நிலையம்) நேற்றிரவு உடுமலைக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து அந்த பஸ் வெளியே வந்தது.
அப்போது அங்குள்ள பாலத்தின் அடியில் பல்லடம் சாலை நோக்கி திரும்பியது. அந்த சமயத்தில் பஸ் நிலையத்துக்கு மற்றொரு பஸ் வரவே உடுமலை பஸ் டிரைவர் பஸ்சை நன்கு வளைத்து திருப்பினார்.
இதில் எதிர்பாராத விதமாக பஸ்சின் பின்பகுதி மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதி மேம்பாலத்தை தாங்கி நிற்கும் தூணின் மீது உரசியபடி சிக்கிக்கொண்டது. இதனால் இடது புறமாக சாய்ந்தபடி பஸ் நின்றது.
சாலையை அடைத்தபடி பஸ் நின்றதால், அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பஸ்சை இயக்க முடியாததால், பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி வேறு பஸ்களை தேடி சென்றனர். பஸ் சாலையை மறைத்தபடி நின்றதால் பஸ் நிலையத்துக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், இதர வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். மேலும் கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பஸ்சின் பின் சக்கரத்தில் ரோப் கட்டப்பட்டு பக்கவாட்டில் இழுத்து மீட்கப்பட்டது. அதன்பின் பஸ் பணிமனைக்கு ஓட்டி செல்லப்பட்டது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக பஸ் நிலைய பகுதியில் இரவு 9 மணிமுதல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.