சென்னை,
கொரோனா தொற்று காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 28-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பஸ் போக்குவரத்தை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளவும், குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் இன்று காலை முதல் பணிமனையில் உள்ள பேருந்துக்களை தூய்மை படுத்தும் பணியில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு பேருந்து உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தண்ணீர் கொண்டு தூய்மைப்படுத்தி தயார் செய்து வருகின்றனர். மேலும் பேருந்துகளை பேருந்து நிலையங்களில் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணம் என்று ஸ்டிக்கா ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு என வெவ்வேறு வண்ணங்களில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு உள்ளது.