தமிழக செய்திகள்

அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்த வேண்டும் ஆய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டங்களான வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் குறித்தும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளிப்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்கு சென்றடைய உரிய அறிவுரைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிக பெயரை உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக பனை வெல்ல உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, சந்தையில் தரமான பனை வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனை வெல்ல உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு தற்போது லாபகரமான தொழிலாக உள்ளதால் பட்டுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக மல்பெரி பயிரிடும் பரப்பினை ஒரு லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கச்சா பட்டிற்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால் கச்சா பட்டு உற்பத்தியினை சுமார் 3100 டன்னாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பட்டு விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கப்பெற ஏதுவாக அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மின்னணு ஏல முறையினை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் வெண்பட்டு உற்பத்தியினை விரிவுபடுத்த ரூ.1000 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திட வரைவுத்திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து அத்திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலா கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல் மற்றும் நிரந்தர விளம்பர பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றை கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சி திடல்களை, கைவினைஞர்களுக்கு பயன்படும் வகையிலும், சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிறுவனம் 2023-ம் ஆண்டு 50-ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் விதமாக பொன்விழாவினை கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களைக் கவுரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, முதன்மைச் செயலாளர்/கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெ.ஷோபனா, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் த.பொ.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் பொ.சங்கர், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில், மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. மதுரையில் கருணாநிதியின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவகம் ஆகியவற்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை