சென்னை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (TAPS) தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிகரான பலன்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.
இதையடுத்து, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
அரசு ஊழியர்களின் வேர்வைத்துளிகள் மதிக்கப்பட வேண்டும், கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும். ஆகையால் தான் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம்.
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி வரக்கூடிய நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காக பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான் அரசாங்கம்.
ஒரு நாணயத்தில் இரு பக்கங்களாக இருக்கக்கூடிய அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் ஒருசேர பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் திமுக அரசு உள்ளது. கருணாநிதி ஆட்சி காலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பொற்காலம்.
திமுக அரசில் நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி என பல்வேறு திட்டங்களால் திமுக அரசுக்கு நற்பெயரும் செல்வாக்கும் கிடைத்ததற்கு அந்த பெருமையில் பெரும் பங்கு அரசு ஊழியர்களையே சாரும். அந்த நன்றியை கூறும் வாய்ப்பாக இந்த மாநாட்டிற்கு நான் வந்துள்ளேன்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் கண்களாக, கரங்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வேர்வைத்துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக்கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறபு கருணை ஓய்வூதியம், உழைப்புக்கான உரிமைத்தொகை என்ற பெயரில் வழங்கப்படும்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு (திமுக அரசுக்கு) பக்கபலமாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.