கோவில்பட்டி,
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் காலமானார்.
கி.ரா. உடலுக்கு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் புதுவை அரசு சார்பில் காவல் துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அவரது உடல், அவர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்திற்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டது.
அங்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் திமுக எம்.பி கனிமொழி கூறுகையில்,
கரிசல்காட்டின் வாழ்க்கையையும், மொழியையும் தமிழ் உலகிறகு கொண்டுவந்து சேர்த்தவர் கி.ராஜநாராயணன். இலக்கிய சிந்தனை, சாகித்ய அகாடாமி விருது பெற்றவர். தமிழ் உலகமே கி.ரா என அழைக்கப்பட்டவர்.
எழுத்தாளர் ஒருவருக்கு முதல் முறையாக அரசு மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. அதை வழங்கிய முதல்-அமைச்சருக்கு குடும்பத்தார், தமிழ் எழுத்தாளர். மற்றும் தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கி.ராவுக்கு சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.