சென்னை,
இது குறித்து தமிழக அரசு முதன்மைச் செயலளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வரால், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று ஏனையவற்றுக்கிடையே, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி இன்று ஆணை வெளியிடப்பட்டது.
இவ்வாணையினால் சத்துணவு மையங்களில் பணிபுரியும் 29,137 சமையலர்களும் மற்றும் 24,576 சமையல் உதவியாளர்களும் பயனடைவர். சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஊக்கமுடன் பணியாற்றி செம்மாந்த முறையில் இத்திட்டத்தினை செயல்படுத்திட இந்த அரசாணை வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.