சென்னை,
அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு டாக்டர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்துவருகிறார்கள். ஆனால் கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய டாக்டர்களின் நலனை தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த, கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக டாக்டர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் ஆகியவை இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளன.
முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு டாக்டர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், முதல்-அமைச்சர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது நியாயமா? 2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் டாக்டர்களாவது நியமனம் செய்யப்படவேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும். எனவே கொரோனா தொற்றின் கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு டாக்டர்களின் நீண்டகால 4 அம்ச கோரிக்கைகளை உடனடியாக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.