சென்னை,
தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-
* விருதுநகர் ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த ரவிகுமார், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (கல்வி) செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த ஷங்கர் லால் குமாவத், வணிகவரித்துறை (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையின் துணைச் செயலாளர் அம்ரித் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் மாற்றப்பட்டு, கணக்கெடுப்பு மற்றும் தீர்வுத் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகர்கோவில் மாவட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி மையத் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் செயலாளர் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு, ஓசூர் உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாவட்ட ஆட்சியராகச் செயல்பட்டு மாற்றப்பட்டிருந்த சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் வளர்மதி மாற்றப்பட்டு, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையர் எம்.லஷ்மி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மகளிர் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* இ-சேவை பிரிவு இணை இயக்குநர் கமல் கிஷோர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகராட்சி வட்டாரத் துணை ஆணையர் (வடக்கு) பதவி வகித்த ஆகாஷ் மாற்றப்பட்டு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மலைப்பிரதேச வளர்ச்சித்துறை (உதகமண்டலம்) திட்ட இயக்குநர் பதவி வகிக்கும் சரயு மாற்றப்பட்டு, தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பு மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, ஐஏஎஸ் அதிகாரிகள் மூவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பதவி வகிக்கும் விபு நாயருக்கு கூடுதலாக சிறப்பு செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகிக்கும் மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
* புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராகப் பதவி வகிக்கும் சந்திரகாந்த் பி.காம்பிளேவிற்கு கூடுதலாக நிலச் சீர்திருத்தத்துறை ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.