ஓமலூர்:
கனமழை
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை செய்தது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து மஞ்சள், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதற்கிடையே சக்கரை செட்டிபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கியது. மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விவசாய நிலங்களில்...
சக்கரை செட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அதிகாரி அலுவலக வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தொடர் மழையால் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சென்றாயன் ஆகியோர் சம்பவ இடத்த பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் திண்டமங்கலம் ஊராட்சியில் களர்பட்டி அருகே தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. பயிரிடப்பட்ட நெல், சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.