தமிழக செய்திகள்

அரசு அலுவலர்கள் கடமைகளை உணர்ந்து பணி செய்கிறார்கள்-அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

தகவல் பெறும் உரிமைச்சட்டம் வந்ததால் அரசு அலுவலர்கள் கடமைகளை உணர்ந்து பணி செய்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 குறித்து, பல்வேறு பயிற்சி வகுப்புகளை அண்ணா மேலாண்மை நிலையம் நடத்தி வருகிறது.

அதன்தொடர்ச்சியாக அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை அடையாறு, பசுமை வழிச்சாலையில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடந்தது.

கருத்தரங்கை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாநில தகவல் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் மற்றும் முன்னாள் மாநில தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி, அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனரும், கூடுதல் தலைமை செயலாளருமான வெ.இறையன்பு, அரசு துறைகளில் பணியாற்றி வரும் 200 பொது தகவல் அலுவலர்கள், மேல் முறையீட்டு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பாக, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் அரசாணைகளின் தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பையும், தனி நபர்களும், தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்களும் அதை வாங்கி பயன்பெறலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தகவல் பெறும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தங்களின் குறைகள் குறித்து, அரசுத்துறைகளுக்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீது, எவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தங்களுக்கான உரிமைகள் குறித்தும் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு வந்து இருக்கிறது. மேலும், அரசுத்துறைகளில் பணிபுரிந்துவரும் அரசு அலுவலர்களும், தங்களுக்கான கடமைகளையும், சமூகப்பொறுப்புகளையும் உணர்ந்து, தங்களது பணிகளை காலவரம்பிற்குள் செய்து முடிக்கின்ற கட்டுப்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் உண்மையான நோக்கத்தை, பொதுமக்களும், அரசு அலுவலர்களும் முழுமையாக அறியாததன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே மவுன யுத்தங்கள் நடைபெற்று வந்தன.

அண்ணா மேலாண்மை நிலையத்தால், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கூறுகள் குறித்து, அரசுத்துறைகளில் பணியாற்றிவரும் அலுவலர்களுக்கு, பல்வேறு பயிற்சிகள் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாக, இச்சட்டம் பற்றிய அச்சம் நீங்கி, பெறப்படும் மனுக்களுக்கு, எவ்வகையில், தகவல்களை வழங்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு