தமிழக செய்திகள்

அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

கழிவறை வசதி இல்லாமல் சிமெண்டு காரை பெயர்ந்த நிலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு விரைவு பஸ்கள்

மக்களின் போக்குவரத்து வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அல்ட்ரா டீலக்ஸ்' பஸ், குளிர்சாதன வசதி பஸ், படுக்கை வசதிகொண்டகுளிர் சாதன வசதி பஸ், படுக்கை மற்றும் இருக்கை வசதிகொண்ட குளிர்சாதன பஸ், படுக்கை வசதிகொண்ட பஸ், படுக்கை மற்றும் இருக்கை வசதிகொண்ட பஸ், கிளாசிக் பஸ் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து தான் ஊட்டி, பெங்களூரு, திருச்செந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவிலுக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது.

இருக்கைகள் இல்லை

தற்போது சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் வெளியூர் பயணம் செய்வதற்காக வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை. மக்கள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் எதுவும் இல்லை இதனால் மக்கள் பெரும்பாலும் நிற்க வேண்டிய நிலை தான் உள்ளது.

மேலும் அவசர தேவைக்காக ஆண்கள், பெண்களுக்காக தனித்தனியாக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிவறைகள் எதுவும் பயன்பாட்டில் இல்லை. கழிவறைகள் பூட்டப்பட்டு உள்ளன. அந்த கழிவறைகளுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் பஸ்களில் வெளியூர் செல்வதற்காக வரக்கூடிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

சிமெண்டு காரை பெயர்ந்தது

இவர்கள் எல்லோரும் அவசரத்திற்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமின்றி போதுமான குடிநீர் வசதியும் இல்லை. அடிப்படை வசதிகள் தான் போதுமான அளவு இல்லை என்றால் கட்டிடங்களும் மிகவும் மோசமாக உள்ளது. அதுவும் மக்கள் நிற்கக்கூடிய இடங்களில் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

மேலும் இந்த கட்டிடங்களில் பெரும்பாலான இடங்களில் விரிசல் விழுந்து, சிமெண்டு காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கனவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கட்டிடங்களில் ஆங்காங்கே பெயர்ந்து இருக்கக்கூடிய சிமெண்டு காரை கீழே விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி பெயர்ந்து விழுந்தால் பஸ்சிற்காக காத்து நிற்கக்கூடிய மக்கள் மட்டுமின்றி அவர்களை பஸ்சில் ஏற்றி விடுவதற்கு வந்த உறவினர்களும் பாதிக்கப்படுவார்கள்.

பயணிகள் எதிர்பார்ப்பு

எனவே கட்டிடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமின்றி பணிமனையின் நுழைவு பகுதியில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பஸ்களை கழுவக்கூடிய தண்ணீர் வெளியே செல்வதற்கு வழியில்லாமல் நுழைவு வாயிலில் தேங்கி நிற்கிறது. லேசாக மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பணிமனைக்கு செல்லக்கூடியவர்கள் அந்த தண்ணீரில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள். அதுபோன்ற நிகழ்வு வேறு எங்கேயும் நடைபெறாமல் இருக்க பழுதான கட்டிடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்