சென்னை,
தமிழக சட்டசபையில் நிகழ்த்தப்பட்ட கவர்னர் உரையை, தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அதுபற்றி அவைக்கு வெளியே நிருபர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-
கவர்னர் உரையை தி.மு.க. புறக்கணிப்பதற்கு காரணம், தமிழகத்தில் கடன் தொகை 4 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று அமைச்சரவை தீர்மானம் போட்டு இதே கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் அதுபற்றி இதுவரையில், கவர்னரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.
இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை அ.தி.மு.க. ஆதரித்திருக்கிறது. அதனால் அந்த திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையமும், காவல்துறையும், அரசு நிர்வாகமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக செயல்பட்டிருக்கின்றன. புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அந்த வட்டாரத்தில் உள்ள எம்.எல்.ஏ. ஆகியோர் மேடையில் இருந்த ஒரு அரசு அதிகாரியை கீழ்த்தரமாக பேசியுள்ளனர்.
தி.மு.க.வை நீ வெற்றி பெற வைத்து விட்டாய், நாங்கள் சொன்னதுபோல நீ கேட்கவில்லை என்று ஆபாசமான வார்த்தைகளால் பேசி, அவரை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தமிழக அரசு திடீரென்று, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு போட்டிருக்கிறது. இதே சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தோமே, அது என்னவாயிற்று? இரண்டு ஆண்டுகளாக அதைப் பற்றி எதுவும் கவலைப்படவில்லை.
இது ஒரு பெரிய கபட நாடகம். அனிதா உள்ளிட்ட 7 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்கள். இப்போது புதிதாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றுவதற்காக தொடங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டிக்கும் வகையில்தான் ஆளும் கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கவர்னர் உரையை நாங்கள் புறக்கணிக்க முடிவெடுத்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வளர்பிறையா?, தேய்பிறையா?
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-