தமிழக செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகம் வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

பரபரப்பான அரசியல் சூழலில் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழகம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்.

சென்னை,

தினகரன் ஆதரவு 18 எம்.எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து 18 தொகுதிகள் காலியாகி விட்டதாக அறிவிக்க கோரி இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக சட்டசபை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பி உள்ளார். இதை ஏற்று தேர்தல் கமிஷன் 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் அந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அத்துடன் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும்.

சபாநாயகர் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பேசினார். இரண்டாவது முறையாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை இன்று காலை மீண்டும் சந்தித்து பேசினார். இதையடுத்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிற்பகல் தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்துள்ள ஆளுநரை கிண்டி ராஜ்பவனில் இன்று மாலை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுநர் உத்தரவிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருவதல் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.