தாமரைக்குளம்:
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உயர் கல்வியில் மொத்த பதிவு விகிதத்தினை மேம்படுத்துவதற்கு பள்ளிக்கல்வி துறையோடு இணைந்து 12-ம் வகுப்பு பயிலும் அரியலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் மற்றும் கல்லூரிகளுக்கு களப்பயணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமை தாங்கினார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வேலுசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளை பார்க்க முடிந்தது. இதன் மூலம் அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் மாணவர்கள் சிறப்பாக பயின்றால் அதிக மதிப்பெண்களை பெறலாம். அதன் மூலம் அதிக செலவின்றி கல்லூரிகளில் எளிதாக சேர முடியும் என்பதை புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும், என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.