தமிழக செய்திகள்

ஈரோட்டில் அரசு ஆசிரியை படுகொலை: கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை படுகொலை

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). ஈரோடு வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.

நேற்று முன்தினம் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற மனோகரன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புவனேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புவனேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்து மர்மநபர் கொலை செய்ததும், அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக முகத்தை தலையணையால் அழுத்தி பிடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கணவரிடம் விசாரணை

கொலையாளியை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை பார்வையிட்டனர். ஆனால் அந்த வீதியில் ஒரு கேமரா மட்டுமே உள்ளது. அதிலும் வெளிநபர் நடமாட்டம் இருந்ததாக தெரியவில்லை. இருந்தாலும், வெளிநபர் நடமாட்டம் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த செல்போன் சிக்னல் விவரத்தை பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரியின் கணவரான மனோகரனையும், அவரது வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு தனியாக குடியிருக்கும் திருமணம் ஆகாத தனியார் பள்ளிக்கூட ஆசிரியரான பல்ராம் (30) என்பவரையும் போலீசார் நேற்று முன்தினமே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணை 2-வது நாளாக நேற்றும் நடந்தது. மனோகரனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பல்ராமிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உண்மை காரணம்

கொலை நடந்த இடத்தில் புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை மட்டும் மாயமாகி இருந்தது. ஆனால் வீட்டில் இருந்த பணம்-நகை கொள்ளையடிக்கப்படாமல் உள்ளது. எனவே வேறு ஏதாவது காரணத்துக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக கொலை நடந்து இருக்கலாமா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே புவனேஸ்வரியின் கணவரிடம் முழுமையான விசாரணை நடந்த பிறகே உண்மையான காரணம் தெரியவர வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...