சென்னை,
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை, சட்ட ஆணையராக நியமித்து கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி சகாயம், விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டதால், தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்ததோடு, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் பரிந்துரை செய்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கும், இந்த நிறுவனங்களின் கிரானைட் கற்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும், வழக்கின் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று பி.ஆர்.பி. நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்கள் எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்த கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் கிரானைட் கற்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்பது அரசுக்கே தெரியாவிட்டால், அரசு எந்திரம் செயல் அற்றுப்போய் விட்டதாக கருத வேண்டியது வரும்.
ஒரு சிறிய நகையைக்கூட எளிதில் கண்டுபிடிக்கும் அரசு அதிகாரிகளால், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிரானைட் கற்கள் எங்கிருந்து வெட்டி கொண்டுவரப்பட்டவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாதா? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, பி.ஆர்.பி. உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முன்வைக்கும்படி உத்தரவிட்டனர்.
பின்னர், மதுரை கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை முடித்து வைப்பதாகவும், தேவைப்படும்போது, இந்த வழக்கு விசாரணைக்கு தன் வக்கீல் மூலம் சகாயம் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.