சென்னை,
சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி., முன்னாள் கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். என கூறி இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த குட்கா ஊழலில் தமிழகத்தின் உயர்ந்த பதவியில் உள்ள போலீஸ் டி.ஜி.பி., சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர், துணை கமிஷனர் என்று பலர் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், எப்படி நியாயம் கிடைக்கும்? எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு வாதம் செய்தது.
அப்போது நீதிபதிகள், குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய தொகையை லஞ்சமாக கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் தான் சரியாக இருக்கும் என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார். அவர் வேறு ஒரு வழக்கில் வேறு நீதிமன்றத்தில் உள்ளார் என்று அரசு பிளீடர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அப்போது அட்வகேட் ஜெனரல் அரசு தரப்பின் கருத்தை கேட்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.