சென்னை,
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியது. டி.ஜி.பி. மீதான குற்றச்சாட்டு என்பது விசாரணை அளவில்தான் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணையை டி.ஜி.பி. சந்திப்பார் என்றும், அவர் பதவி விலக வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். சிட்டி செண்டரில் இருந்து பேரணியாக சென்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் போரட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, திமுகவினர் போராட்டம் நடத்த இருப்பதை அடுத்து, டி.ஜி.பி. அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.