சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கு தமிழக போலீஸ் லஞ்ச தடுப்புப் பிரிவிடம் இருந்து, சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டு விட்ட பிறகும், அந்த ஊழலில் பணம் பரிமாற்றப்பட்டது குறித்த விசாரணையை முடக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக இந்த ஊழல் குறித்த ஆவணங்களை அமலாக்கப்பிரிவுக்கு வழங்க அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவினரும் இந்த ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் குட்கா ஊழல் குறித்த சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில், பெயர் தெரியாத அதிகாரிகள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ள நிலையில், அதனடிப்படையில் விசாரிக்க அமலாக்கப்பிரிவால் முடியவில்லை.
மாறாக, கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்களும், அவர்களின் விவரங்களும் இடம் பெற்றிருப்பதால் அதனடிப்படையில் மட்டுமே அமலாக்கப் பிரிவு விசாரிக்க முடியும். அதற்காக, குட்கா வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்கும்படி அமலாக்கப்பிரிவு விடுத்த வேண்டுகோளைத் தமிழக காவல்துறை நிராகரித்துள்ளது. இதற்காக காவல்துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.
குட்கா ஊழலை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் வருமானவரித்துறையிடமும், சி.பி.ஐ.யிடமும் உள்ளன. அவற்றின் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவது உறுதி. எனவே, எத்தகைய பழிக்கும் ஆளாகாமல், குட்கா ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவிடம் லஞ்ச தடுப்புப் பிரிவு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.