நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிகாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது47). இவர் ஜம்முகாஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி அங்கு திருமூர்த்தி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
மரணம் அடைந்த ராணுவ வீரர் திருமூர்த்திக்கு தமிழரசி (44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர். திருமூர்த்தியின் உடல் சொந்த ஊரான புள்ளவராயன்குடிகாடு கிராமத்துக்கு விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீடாமங்கலம் திருமூர்த்தி எல்லைப் பாதுகாப்பு படையில், 173-வது படைப்பிரிவில் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி எதிர்பாராத வித மாக திருமூர்த்தியின் துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்-அமைச்சர் அதில் கூறியுள்ளார்.