சென்னை,
அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், சென்னை தண்டையார்ப்பேட்டையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது வீட்டில் தடுமாறி விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் மதுசூதனனை நலம் விசாரிக்க முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 4.35 மணிக்கு அவரது இல்லம் சென்றார். தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அழைத்து சென்றனர்.
அங்கு இ.மதுசூதனனை சந்தித்து மலர்க்கொத்து வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். பின்னர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று கட்சி பணியாற்ற வரவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம் பேசிவிட்டு, மாலை 5.10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் தனது இல்லம் நோக்கி புறப்பட்டார்.