நெல்லை,
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குமுளியிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்தில், ஆயுதப்படைக் காவலர்களான தமிழரசன் மற்றும் மகேஷ் ஆகியோர் ஏறியுள்ளனர்.
பேருந்து நடத்துநர் ரமேஷ், அவர்கள் இருவரையும் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் வகையில் தங்களிடம் வாரண்ட் இருப்பதாக கூறிய காவலர்கள் இருவரும் பயணச்சீட்டை எடுக்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், வாரண்ட்டை காண்பிக்குமாறு நடத்துநர் ரமேஷ் காவலர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் வாரண்ட்டை காட்ட மறுத்த காவலர்கள் இருவரும், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது காவலர் ஒருவர் நடத்துநர் ரமேசின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தொடர்ந்து நடத்துநரை காவலர்கள் இருவரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் நடத்துநருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
நெற்றியில் ரத்தம் வழிய நடத்துநர் தான் தாக்கப்பட்டது குறித்து பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அருகிலிருந்த மூன்றடைப்பு காவல் நிலையத்துக்கு பேருந்துடன் சென்ற நடத்துநர், தன்னை தாக்கிய காவலர்கள் இருவர் மீதும் புகார் அளித்தார்.
பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடத்துநர் அளித்த புகாரின் பேரில் ஆயுதப்படை காவலர்கள் இருவரையும் மூன்றடைப்பு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் காவலர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பயணச்சீட்டு எடுக்குமாறு கூறிய அரசு பேருந்து நடத்துநரை ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தாக்கிய சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
.அண்மைக்காலமாக பயணச்சீட்டு எடுக்க செல்லும் பேருந்து நடத்துநர்களை பேலீசார் தாக்குவது தெடர்கதையாக மாறி வருவதாக பேக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.