திருப்பத்தூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனிதசங்கிலி நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி (வயது52) கலந்து கொண்டு இரவில் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை தலைமை ஆசிரியை பானுமதி திடீரென இறந்தார். பானுமதியின் கணவர் ராஜராஜன் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிய தலைமை ஆசிரியை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.