தமிழக செய்திகள்

கால்களை அமுக்க மாணவர்களை பயன்படுத்திய தலைமை ஆசிரியை இடைநீக்கம்

இது பற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர், தலைமை ஆசிரியையை சந்தித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளனர்.

தோவாளை,

குமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு 5-ம் வகுப்பு மாணவர்களை, தலைமை ஆசிரியை தனது சுய வேலைகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போது அவரது கால்களை பிடித்து விட சொல்வாராம். இது மட்டுமின்றி பள்ளி கழிவறைகளை கழுவ வைப்பது போன்ற வேலைகளையும் செய்ய வைத்துள்ளார்.

புகார்

இது பற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர், தலைமை ஆசிரியையை சந்தித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதில் திருப்தி அடையாத பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகள், கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேற்று நேரில் சென்று மாணவர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.