தமிழக செய்திகள்

ரெயில் நிலையங்களில் வெப்ப பரிசோதனை: முககவசம் அணியாத பயணிகளுக்கு உடனடி அபராதம்

ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் வெப்ப பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும், முககவசம் அணியவில்லை என்றால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முககவசம் அணிந்து வராத பயணிகளிடம் முககவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, அவர்களுக்கு முககவசம் வழங்கினார். தொடர்ந்து முககசவம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:-

தடுப்பு பணி தீவிரம்

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். மராட்டியம், பஞ்சாப், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, ரெயில் நிலையங்களில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

தாம்பரம், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பயணியருக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் பகுதியில், சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தான், அதிகளவு தொற்று பரவியது. அங்கு, முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

உடனடி அபராதம்

தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்வோர், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல், மாநகராட்சியிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற வேண்டும். மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படைப்போல், கொரோனா தடுப்பு பறக்கும்படை ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் 3 ஆயிரத்து 600 கொரோனா தடுப்பூசி மையங்கள் உள்ளன. தடுப்பூசி செலுத்தி கொள்ள பல்வேறு அமைப்பினர் முன்வந்துள்ளனர். தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ரெயில் நிலையங்களில், பயணியருக்கு, உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறை இல்லை. இனி, உடனடி அபராதம் விதிக்கும் முறைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதன் வாயிலாக தொற்றை கட்டுப்படுத்தலாம். நோய் குறித்து அலட்சியம் காட்டாமல் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கிடைக்காத நிலையில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு உள்ளதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு