தமிழக செய்திகள்

பலத்த மழை; சூறை காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்தது

பெரம்பலூர், அரியலூரில் பலத்த மழை பெய்தது. இதில் சூறை காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்தது.

மின்கம்பம் சாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்குள் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் சிலர் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. வெயிலினால் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்பு சாறு, குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவைகளை வாங்கி பருக தொடங்கினர். மேலும் பொதுமக்கள் மழை பெய்யாதா? என்று எண்ணி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும், நேற்று மதியமும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றியும் மழை பெய்யவில்லை. மாலை 6 மணியளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று பெய்ய தொடங்கிய மழை சுமார் 9 மணிவரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

சில பகுதிகளில் மழை பெய்யும் போது பலத்த சூறை காற்று வீசியது. சூறை காற்றுக்கு பெரம்பலூர் அருகே செஞ்சேரி முதல் காலனியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அப்போது யாரும் அந்த வழியாக செல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. சில இடங்களில் மரம் முறிந்தது. மழை பெய்யும் போது பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது. பலத்த மழையினால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றன. மேலும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தேங்கியிருந்த கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. சிறிது நேரம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்கட்டி மழை

இதேபோல் அரியலூர் நகரில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் 6.30 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் தொடங்கிய மழை திடீரென்று ஆலங்கட்டி மழையாக பெய்ய ஆரம்பித்தது. பழைய வீடுகளில் ஓடுகளை உடைத்துக் கொண்டு ஐஸ்கட்டிகள் வீட்டுக்குள் விழுந்தன. பின்னர் சிறிது நேரத்தில் சாதாரண மழையாக மாறி அரை மணி நேரம் மழை பெய்தது.அரி யலூரில் நகரில் உள்ள ஒருசில கடை களில் மழைநீர் புகுந்தது. இதேபோல் உடையார்பாளையம், முனையத்தரியன்பட்டி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, இடையார், ஏந்தல், தத்தனூர், வெண்மான்கொண்டான், மனகெதி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கோட்டியால், பருக்கல், சோழங்குறிச்சி, ஒக்கநத்தம், பிலிச்சிக்குழி, நடுவளூர், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.