நெல்லை,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை நெல்லை பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் காலை 6 மணியளவில் பரவலாக மழை பெய்தது. பின்னர் மாலை 6 மணிக்கு நெல்லை மாநகர பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் பேட்டை, சுத்தமல்லி, கொண்டாநகரம், சேரன்மாதேவி, மணிமுத்தாறு, கோபாலசமுத்திரம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. தூத்துகுடியில் நேற்று காலை சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதேபோல சுற்றுலா தலமான கொடைக்கானலிலும் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. பலத்த மழையால் கொடைக்கானலை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர்சோழா அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.