தமிழக செய்திகள்

வடசென்னையை புரட்டி போட்ட கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புயல் காரணமாக பெய்த கனமழையால் வடசென்னை பகுதி முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

நிவர் புயல் கரையை கடக்க இருந்ததையொட்டி நேற்று சென்னை மாநகர் முழுவதும் தொடர் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டதுடன், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

குறிப்பாக வடசென்னை பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம், பெரம்பூர் ரெயில் நிலைய சாலைகள் முழுவதும் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. அதேபோல் பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி கிடந்ததால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பாரிமுனை- மண்ணடி சாலையிலும் மழை தண்ணீர் தேங்கி கிடந்ததால் அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு அறிவித்ததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்தும், பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

திருவொற்றியூர் சாலையில் கனமழையுடன் கடல் காற்று அதிகமாக வீசியது. அபாயகரமான சூழ்நிலையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் குடும்பம், குடும்பமாக சென்று அலைகளின் சீற்றத்தை வேடிக்கை பார்த்தனர். அத்துடன் செல்போன் மூலம் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

ராயபுரம், சூரியநாராயணசாலையில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தது. அதேபோல் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை எதிரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. ஓட்டல்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை தவிர்த்து மீதம் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு கிடந்தது. கனமழையிலும் டாஸ்மாக் கடைகளிலும் மட்டும் மதுபிரியர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அமோக விற்பனை நடந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காமல் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்து இரும்பு தடுப்பு வேலிகள் அனைத்தும் நிலை தடுமாறி சாலையில் விழுந்து கிடந்தன. உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது.

சென்னை துறைமுகத்தில் 9-வது புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகத்தையும், கடலின் சீற்றத்தையும் கண்காணிப்பு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து கொண்டே இருந்தனர். பகலில் 34 கடல்மைல் வேகத்தில் வீசிய காற்று நேற்று மாலையில் 50 நாட்டிக்கல் மைல் வேகத்தில் அதிகரித்தது. இதனால் சென்னை துறைமுக வாயில் மூடப்பட்டு, எந்த வாகனங்களும் உள்ளே அனுமதிக்கவில்லை. அத்துடன், கப்பல்களில் வரும் சரக்குகளை இறக்குவதற்கு பயன்படும் ராட்சத கிரேன்களும் கடற்கரையில் இருந்து வெகு தொலைவிற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதேபோல் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட கப்பல்களும் பாதுகாப்பான முறையில் நிலை நிறுத்தப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து நிலமையை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் மழை நீர் புகுந்து கட்டுமானங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அந்தவழியாக வாகனங்கள் சென்றால் சுரங்கத்துக்குள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால், எழும்பூரில் இருந்து சென்டிரல் நோக்கி செல்லும் சாலையை தற்காலிகமாக மூடி போலீஸ் பாதுகாப்பு போட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீர் அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது.

கனமழையால் சிந்தாதிரிப்பேட்டை கூவம் சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த நடைபாதையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அப்புறப்படுத்திவிட்டு, தண்ணீரை கூவம் ஆற்றுக்கு திருப்பி விட்டனர். இதன் பிறகு சாலையில் தேங்கிய மழை நீர் கூவம் ஆற்றுக்குள் வடிந்தது. அதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள மழை நீர் கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. ஊருக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதால் நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரம் திறந்துவிடப்பட்டதால் மழை நீர் கடலில் சென்றது. ஆக மொத்தத்தில் வடசென்னை பகுதியை கனமழை புரட்டி போட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்