தமிழக செய்திகள்

விபத்தில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஹெலிகாப்டர் இறங்குதளம்; பொதுப்பணித்துறை தீவிரம்

சாலை விபத்துகளில் சிக்குபவர்களை ஹெலிகாப்டர்களில் கொண்டுசென்று துரிதமாக சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை,

மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துகளில் காயமடைவோருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 19 ஆயிரத்து 820 விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. இதில் உயிரிழப்பு சதவீதம் 14.03 என்ற அளவில் உள்ளது.

விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விபத்து விகிதம் நடப்பாண்டு அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னை, தேனி போன்ற மாவட்டங்களில் இறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். அங்கு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஹெலிகாப்டரில் அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து அவர் கேட்டறிந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்தில் இருந்து மாநகரத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதன் மூலம் விலை மதிப்பு மிக்க உயிரை காப்பாற்ற முடியும் என்பதால் தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதன்படி இந்த திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தலைமை மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்குபவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்ப்பதற்காக வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் விரைவில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம் செலவில் சர்வதேச தரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.

ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மருத்துவமனைகளின் மொட்டை மாடிகளில் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர்கள் மொட்டை மாடியில் தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதாலும், தடிமனான கான்கிரீட் போன்றவை அமைக்க வேண்டியிருப்பதாலும் அதனை தவிர்த்து விட்டு, மருத்துவமனை வளாகத்திலேயே தரையில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விரைவில் கட்டப்பட உள்ள பன்னோக்கு மருத்துவமனையிலும் தற்போது ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க இருக்கிறோம். தொடர்ந்து வரும் காலங்களில் புதிதாக கட்டப்படும் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...