தமிழக செய்திகள்

போலீஸ் தேர்வு பணிகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவு - தமிழர்கள் நேர்மையை இழந்துவிட்டதாக நீதிபதி கருத்து

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான ஒட்டுமொத்த தேர்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய முறைகேடு தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் என்று மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த தேர்வில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். இதன்படி நடந்த எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது.

இதையடுத்து, கடந்த 2-ந்தேதி, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்ச்சி பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 1,019 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 763 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. எனவே, இந்த தற்காலிக தேர்வு பட்டியலை ரத்துசெய்ய வேண்டும்.

இந்த தேர்வில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த முறைகேடு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டைவிட மிகப்பெரிய முறைகேடாகும். போலீஸ் தேர்வில் நடந்துள்ள இந்த முறைகேட்டை தமிழக போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ரவி ஆனந்தபத்மநாபன், இந்த போலீஸ் பதவிக்கான எழுத்து தேர்வில் முடிவு பட்டியலில் 2 பேருடைய பெயரே இல்லை. ஆனால், இறுதி தேர்ச்சி பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்வில் தேர்வாணையத்தின் அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து மிகப்பெரிய மோசடியை ஒரு கும்பல் செய்துள்ளது என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்று வேதனையுடன் கருத்து தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி போலீஸ் தேர்வில் தேர்வானார்கள்? அவர்களில் பலர் எப்படி 69.5 என்ற ஒரே மதிப்பெண்களை பெற்றனர்? எழுத்து தேர்வு தேர்ச்சி பட்டியலில் இடம் பெறாத 2 பேரை உடல் தகுதி தேர்வில் எப்படி பங்கேற்க அனுமதித்தனர்? இதுபோன்ற மோசடி நபர்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்ந்தால் காவல்துறை என்னவாகும்? தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம் என்று நீதிபதி கூறினார்.

அப்போது இந்த வழக்கிற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கிராமப்புற மக்கள் அரசு வேலையை மிகப்பெரிய பதவியாக கருதுகின்றனர். அந்த பதவியை பெற அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு பணிக்கு நடத்தப்படும் தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என்றால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், ஏமாற்றமும் ஏற்படும் என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான ஒட்டு மொத்த தேர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற மார்ச் 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய இதுபோன்ற தேர்வில் முறைகேடுகள் ஏதாவது நடந்ததா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு