சென்னை,
டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் கொண்டு செல்லாமல், இந்தியைத் திணிக்க பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், DRM 783 Khz என்ற அலைவரிசையில் ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றன. இது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும்.
DRM எனப்படும் டிஜிட்டல் வானொலி தான் இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம் ஆகும். பண்பலைக்கு மாற்று இது தான். இந்த அதிசய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் கொண்டு செல்லாமல், இந்தியைத் திணிக்க பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது!
DRM 783 Khz அலைவரிசையில் இந்தி ஒலிபரப்பை நிறுத்தி விட்டு, இனி முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகளையும், தமிழ் செய்திகளையும் டிஜிட்டல் முறையில் துல்லியமாக ஒலிபரப்ப சென்னை வானொலியும், பிரசார் பாரதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.